ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனை!
சுவாமி ஐயப்பன் சிவவிஷ்ணு அம்சமானபோதிலும், ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜவாழ்க்கை பிடிக்கலை. தனக்கு இளவரசு பட்டம் சூட்டுவது அன்னைக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சதும், அதையே சாக்காய் வைத்துச் சபரிமலைக்கு போய்த் தங்கிக்கிட்டார். ஆனாலும், தந்தையின் ஆசைக்காக வருசத்தில் ஒருநாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொல்வதாகத் தன் தந்தைக்கு வாக்களித்தார். அந்தச் சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
பந்தள மன்னர் ராஜசேகரன், ஐயப்பனுக்காகச் சுத்த தங்கத்தினாலான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தார். அந்த ஆபரணங்கள் இன்றும் கேரளத்தில் உள்ள பந்தளம் அரண்மனையில் இருக்கிறது. ஐயப்பன் பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாக வரலாறு. அரண்மனை என்றவுடன் பெரிய மாடமும் தூண்களும் இருக்கும் என்று எல்லோரும் நினைப்போம். ஆனா, அந்த அரண்மனை அப்படி இல்லை. இரண்டு ஒட்டு வீடுகள்தான். அங்குதான் எல்லோரும் பார்க்கத்துடிக்கும் ஐயப்பனின் ஆபரணங்கள் இப்போதும் இருக்கிறது.
பக்தர்கள் புடைச்சூழ வருசத்தில் ஒருநாள், தை முதல்நாளில் மகரஜோதி தெரியுமன்று, பந்தளத்திலிருந்து, அந்த ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விசயங்கள் மூணு இருக்கு.
1. ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லும்போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார். ஐயப்பனின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கும். அதைத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே மலைக்குச் சுமந்து செல்வர். வாழ்நாளில் ஒருமுறையாவது ஐயப்பனின் ஆபரணங்களைப் பார்த்துவிடமாட்டோமா எனப் பக்தர்களை ஏங்கவைக்கும் அந்த ஆபரணங்களைச் சுமந்து செல்வதைஅவர்கள் பெரிய பாக்கியமா நினைக்கிறாங்க.
பந்தளத்திலிருந்து மலைக்குச் செல்ல மூன்று நாட்களாகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்தே செல்வர்கள். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்குது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின்னர் அரண்மனையில் உள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திருஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
மகரஜோதிக்காகப் பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணப்பெட்டி ஊர்வலம் புறப்படும் நேரத்திலிருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் நேரம்வரை மட்டும் வானத்தில் ஒரு கழுகு தோன்றி, திருஆபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வு.
பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஐயப்பன். ஆனாலும், பந்தள ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு அடிக்கடி போகமாட்டாங்க. ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதியன்னிக்கு மட்டுமே போவாங்க. காரணம், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என ஐயப்பன் தன் குடும்பத்தைக் கேட்டுக்கொண்டதாக வரலாறு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.
ஐயப்பன் சபரிமலைக்கு சென்றபின், பந்தள மகாராஜா ராஜசேகரின் மகனான குணசேகரன், தன் அன்னையின் ஆசைப்படி அரியணை ஏறாமல், மணிமகுடத்தை மறுத்து நாட்டைவிட்டு வெளியேறி, பல இடங்களுக்குச் சென்று கடைசியில் சித்தூர் வந்தடைந்து அங்கயே இருந்து தங்கிட்டார். அவருக்குப் பணிபுரியத் தளவாய்மாடன் அருகில் இருக்கிறார்
தமிழ்நாட்டில் அதிக மக்கள் வந்து சாஸ்தாவை வணங்கும் கோவில், சாஸ்தா வேல் வைத்திருக்கும் கோவில், சாஸ்தாவிற்கு தேர்த்திருவிழா நடைப்பெறும் கோவில் ஐயப்பன் அவதாரத்தோடு தொடர்புடைய தமிழகத்தில் இருக்கும் கோவில் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் ஆகும். பல ஜாதியினருக்கும் குலதெய்வமாக விளங்கும் கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திருவிழா நடைபெரும் கோவில் அது.
சித்தூர் தென்கரை மாகாராஜர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதக்கடைசி வெள்ளிக்கிழமை அன்னிக்கு அதாவது ஒடுக்கத்து வெள்ளி இரவு 12 மணிக்குக் கோவில் அர்ச்சகர் குளித்து ஈரத்துணியுடன் கோவிலில் நுழைந்தவுடன் கோவில் கதவைச் சாத்தி விட்டு அவர் மட்டும் தனியாகத் தளவாய் மாடனுக்கு பூஜை செய்வார். பின்னர் கதவைத் திறந்தவுடன் பக்தர்கள் தளவாய் மாடனை வழிபடுவார்கள் அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை அன்று காலையில் தென் கரை மகாராஜாவிற்கு இரண்டு முறை அபிஷேகம் நடை பெறும் பின்பு பக்தற்களுக்கு அருமையான பாயாசத்தூடன் அன்னதானம் நடைபெறும்.
திருவனந்தபுரத்திலிருந்து கேரளத்தின் வடபகுதிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்தளம் இருக்கு. ரயில் மார்க்கமா போகனும்ன்ன்னா செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் பந்தளத்தை அடையலாம். விமான மார்கமாகப் போகனும்ன்னா திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து 100 கி.மீ. சாலைப் பயணம் செய்து பந்தளத்தை அடையலாம். அச்சன்கோயில் நதிக்கரையில் அழகிய இயற்கைச் சூழலில் ஐயப்பனின் குறிப்பிடத் தக்க புனிதத் தலங்களில் ஒன்றான வலிய கோயிக்கால் ஆலயமும், அதனையொட்டி பந்தள அரண்மனையும் இருக்கு.