
தென்னக காசி எனப்படும் அவல்பூந்துறை பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுசுவாமிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாலபிஷேகம் செய்து பூஜைவழிபட்டனர்.
தென்னக காசி எனப்படும் அவல்பூந்துறை பைரவர் கோவிலில் நடைபெற்ற அஷ்டமி பூஜையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது.இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அபிஷேகம் செய்தனர்.
பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதேபோல் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

