
அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன. 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அந்த வகையில், நேற்று ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலை நேற்று வைக்கப்பட்டது, அதன்மூலம், கும்பாபிஷேக விழா அதன் உச்சகட்டத்தை நெருங்கி வருகிறது எனலாம்.
சுமார் 51 அங்குல ராமர் சிலை கோவிலுக்கு நேற்று முன்தினம் (ஜன. 17) கொண்டுவரப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஐந்து தலைமுறைகளாகச் சிலை வடிவமைத்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. அந்தச் சிலையை நேற்று கருவறையில் நிறுவியுள்ளனர்.
துணிகள் போர்த்தப்பட்டு, நேற்று கருவறையில் வைக்கப்பட்ட சிலையின் முதல் புகைப்படம் வெளியானது. இந்தப் புகைப்படங்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊடக பொறுப்பாளர் சரத் சர்மா பகிர்ந்துள்ளார். கடவுள் ராமரின் அந்தச் சிலை 1.5 டன் எடை கொண்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட அந்தச் சிலையில், தாமரையின் மீது ஐந்து வயது குழந்தையாக ராமர் நிற்கிறார்.
வேத பிராமணர்கள் மற்றும் ஆச்சார்யர்கள் கோயிலின் வளாகத்திற்குள் வழிபாட்டு விழாக்களில் தலைமை தாங்குவதைக் காண முடிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா உறுப்பினர்களும் பிரார்த்தனையில் பங்கேற்றதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார். இது அடுத்த நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம் என்றும், ராமருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி முதல் அனைவரும் வரலாம் என்றும் பிரதமர் மோடி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கோயில் அறக்கட்டளையால் அழைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்திற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த விழாவில் கோயில் அறக்கட்டளையின் அனைத்து அறங்காவலர்கள், சுமார் 150 பிரிவுகளின் அந்தணர்கள் மற்றும் பொறியாளர் குழு என்று பெயரிடப்பட்ட கோயில் கட்டுமானத்துடன் தொடர்புடைய 500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.A


