தந்தையின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும்..!

விபத்தில் உயிரிழந்த தந்தைக்கு நீதி கேட்டு ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுக் காவல்நிலையத்துக்குத் தாயுடன் வந்த மகள்கள், மோதிய வாகனத்தைக் கண்டுபிடிக்க வலியுறுத்தினர்.
சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல், தெள்ளியார் அகரத்தைச் சேர்ந்த செல்வம் போரூர் பசுமைப் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குச் சென்றார். நடந்து சென்ற அவரை அவ்வழியாக வந்த வாகனம் இடித்துள்ளது. இதில் காயம் அடைந்த செல்வத்தை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பயனின்றி இரண்டு நாளுக்குப் பின் செல்வம் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் மருத்துவமனையில் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்துச் செல்வத்தின் மனைவி வனஜா, மகள்கள் விஷாலி, வினோதினி ஆகியோர் ஆவடி போக்குவரத்துக் காவல்நிலையத்துக்குச் சென்றனர். செல்வம் மீது மோதிய வாகனத்தைக் கண்டுபிடித்து, அதற்குக் காரணமான ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுத்தினர். பின்னர் காவல்துறையினர் பேச்சு நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
வேகமாக வந்த ஆட்டோ செல்வம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நேர்ந்த நேரத்தில் அடுத்தடுத்து ஐந்துக்கு மேற்பட்ட ஆட்டோக்கள் செல்லும் சிசிடிவி காட்சிகளை செல்வம் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர். அதில் வேகமாக ஆட்டோக்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்கள் செல்வத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்றார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *