
புதுடெல்லி: பாஜகவில் சேராவிட்டால் கைது செய்வோம் என மிரட்டுவதாக டெல்லி அமைச்சர் அதிஷியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பாஜக, “கெஜ்ரிவால் உங்களை முட்டாள் ஆக்கிவிட்டதாக” கூறி இருக்கிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சர் மான அதிஷி பாஜகவில் இணையாவிட்டால் உங்களையும் கைது செய்வோம் என அமலாக்கத்துறை மூலம் பாஜக மிரட்டி வருவதாக இன்று காலை குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பாஜகவின் மூத்த தலைவர் மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
“தனது உதவியாளர் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமைச்சர் அதிஷி கூறியிருக்கிறார். அந்த உதவியாளரின் பெயரை அமைச்சரால் வெளியிட முடியுமா? அப்படி வெளியிட்டால் அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.
அதிஷி போன்ற ஊழல் தலைவர்களை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கெஜ்ரிவாலை தவிர வேறு யாராலும் உங்களை முட்டாள் ஆக்க முடியாது. உங்களைப் போன்ற தலைவர்களின் பெயரை அவர் அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுத்து விட்டார். இதனால் அடுத்த குறி நாம்தான் என்ற அழுத்தம் காரணமாக பாஜக மீது பழி போடுகிறார்கள்.
டெல்லியில் அடுத்த முதல்வர் யார் என்பதில் ஆம் ஆத்மி கட்சிக்குள் பலத்த போட்டி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களில் யாரையும் முதல்வராக்க கெஜ்ரிவால் விரும்பவில்லை. அவர்களது சிறையில் அடைக்க தான் அவர் விரும்புகிறார் அத்துடன் அமைச்சர் அதிஷியின் குடும்பத்தினர் நிதி பரிமாற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள்”.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் பாஜக செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரோனாவும் கெஜ்ரிவாலுக்கு பதிலாக யார் முதல்வர் என்பதில் கட்சியில் போட்டி இருப்பதை உறுதி செய்தார்.
அவர் மேலும் கூறுகையில் “அமைச்சர் அதிஷி ஊடகங்கள் முன்பாக நிலைமையை பெரிது படுத்த முயற்சிக்கிறார். இதற்காக அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


