சென்னை:
தமிழ்நாட்டில் 7வது முறையாகத் திமுக ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டம் தமிழ்நாட்டிற்கு வராது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்தபோது சிரிப்பு வந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரையாற்றினார்.
அதில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் நான் சாதாரணமானவராக இருக்கலாம்.
ஆனால் தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டு வரலாறு கொண்டது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டமன்றம். இந்தச் சட்டமன்றத்தின் மாண்பையும், மக்களின் எண்ணங்களையும் மதிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததன் மூலமாகத் தான் வகிக்கும் பதவிக்கும், பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படும் காரியத்தை அரசியல் உள்நோக்குடன் ஆளுநர் செய்தது இந்த மன்றம் இதுவரை காணாதது.
இனியும் இதனைக் காணக் கூடாது. அவர் அரசியல் ரீதியாக எங்களைப் புறக்கணிப்பதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் திராவிட இயக்கமே புறக்கணிப்புக்கும், அவமானத்திற்கும் எதிராக உதயமானது தான்.
சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி 6வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு திமுகவுக்கு தான் உண்டு.
நிச்சயமாக 7வது முறையாக ஆட்சியமைத்து ஏற்றம் காணும் அரசாகத் திமுக அரசு அமையப் போகிறது. 6வது முறையாக ஆட்சியமைத்தபோது, இது விடியல் ஆட்சியாக அமையும் என்று கூறினோம்.
இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் விடியல் எங்கே என்று கேட்கிறார்கள். விடியல் கொடுப்போம் என்று சொன்னது மக்களுக்குத் தானே தவிர, எதிர்க்கட்சிகளுக்கு அல்ல.
மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி, மாதந்தோறும் 1.16 கோடி சகோதரிகள் ரூ.1,000 உரிமைத் தொகை பெறும்போது வரும் மகிழ்ச்சி, மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து ஆகியவை தான் விடியல் ஆட்சி.
இதன் மூலமாக மகளிரின் சேமிப்பு அதிகரித்துள்ளது. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 22.56 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலருக்கும் வேலை கிடைத்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் பயனடையும் மாணவிகள் என்னை அப்பா என்று அழைக்கிறார்கள். காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவை தான் விடியலின் சாட்சி. திராவிட மாடல் என்று கூறினாலே, சிலருக்கு வயிறு எரிகிறது. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்துச் சிலர் பயப்படுகிறார்கள்.
அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதே முழுமையான வளர்ச்சியைக் கூறுகிறோம்.
இந்தியாவின் 2வது வளர்ந்த பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.2%ஆக உயர்ந்துள்ளது.
பொருளாதார குறியீடுகள் அனைத்தும் தமிழ்நாட்டை எட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தனியார் முதலீடு திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் போராட்டங்கள் நடத்த உரிமையில்லை என்று சிலர் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுமார் 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.
குற்றங்கள் குறைந்து தமிழ்நாடு அமைதி பூங்காவால திகழ்கிறது. சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் கருப்புச்சச்ட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை. சிரிப்பு தான் வந்தது.
அவையை ஆளுநர் அவமதித்ததை கண்டித்து அதிமுக கருப்புச்சட்டை அணிந்திருக்கிறதா? மத்திய அரசு கல்வி கொள்கையைக் கண்டித்து அதிமுக கருப்புச்சட்டை அணிந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஆட்சியில் இருந்தபோது, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக இருந்தது.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
மாநில அரசுக்குக் கருணை இருக்கிறது. ஆனால் நிதி இல்லை. அதுதான் தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம்குறித்து மீண்டும் பேசி மக்களைக் குழப்புகின்றனர். மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்துத் துரோகம் இழைத்தது அதிமுக தான்.
டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளேன். எனது சிந்தனையும், செயல்பாடும் தமிழ்நாடு தான் என்று கூறியுள்ளார்.