Asia Cup 2023: சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி!

ஆசியக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது…

ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது.

நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், 48.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. மழை இடைவிடாது பெய்துகொண்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை நின்ற நிலையில், போட்டி மீண்டும் தொடங்கியதுடன், ஓவர்கள் குறைக்கப்பட்டது.

இந்திய அணிக்கு 23 ஓவர்கள் கொடுக்கப்பட்டு, அதில் 145 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கிக் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் விளையாடினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர்.

இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கைக் கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்துக் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *