
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேரும் பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் இவர்கள் அன்றாட கிடைக்க கூடிய வேலைக்கு செல்பவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் இவர்கள் மூவருக்கும் கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருவதாக மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்துள்ளார்.
தன்னுடைய , ஆண் நண்பருடன் இரவு 11.45 மணியளவில் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது அங்கு வந்த மூன்று பேர், அவர்களை வெளியே வர கூறியுள்ளனர்.
பின்னர் ஆண் நண்பரை தாக்கி அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் இன்று சுட்டுப் பிடித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர், “கைதான கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூன்று பேரும் உறவினர்கள். இவர்கள் இருகூரில் தங்கி கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளனர்.
விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்த இருக்கிறோம். அதுவரை கைதான மூன்று பேரின் புகைப்படங்களையும் வெளியிட வேண்டாம்” என்று காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.



