
மத்திய அரசு திட்டங்கள் எல்லாவற்றின் பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே இருக்கிறது என்றும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் ஏன் வைக்கப்படுவதில்லை எனத் தி.மு.க. நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் உள்ள நாடளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் 125 நாள் வேலைக்கான ரோஜ்கர்-அஜிவீகா திட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானம் குறித்து தி.மு.க. நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியபோது, தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும் பழைய 100 நாள் வேலை திட்டத்தின் பெயரிலேயே வேலைக்கு உறுதி இருந்தது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மாநிலங்களாகிய நாங்கள் 61 சதவீதத்தை கொடுப்பதாகவும் மத்திய அரசு 39 சதவீதம் தான் தருகிறது என்றார். இதையடுத்து, மத்திய அரசு திட்டங்கள் எல்லாவற்றின் பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே இருக்கிறது என்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது மராத்தி போன்ற வேறு பிராந்திய மொழிகளில் ஏன் வைக்கப்படுவதில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.




