
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர் – மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் மாதம் மாதம் நடைபெறக்கூடிய பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஆனது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சித்ரா பௌர்ணமியன்று சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் இன்று அதிகாலை முதல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
சித்ரா பௌர்ணமிகாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் 11 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் அவசர தேவைக்குச் சுகாதாரத் துறையின் மூலம் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்கிப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

