‛டிஎம்கே பைல்ஸ்’ 2வது பாகம் தயாராக உள்ளது-அண்ணாமலை பேட்டி!

Advertisements

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்தினர் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்ற கூண்டில் ஏற்றுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

Advertisements

அண்ணாமலை, கடந்த ஏப்., 14 ல் ‛டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தி.மு.க.,வினரின் சொத்துப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குறித்த தகவலும் இருந்தது. இதனையடுத்து டி.ஆர்., பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(ஜூலை 14) விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலை ஆஜரானார். விசாரணைக்கு பிறகு வழக்கு ஆக., மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.கோர்ட் வளாகத்தில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:‛டிஎம்கே பைல்ஸ்’வெளியிட்ட பிறகு ஆளுங்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்தனர். ஊழலுக்கு எதிரான போராட்டம அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.

பாலு தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்துகள் தொடர்பான பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. பாலு 2004 -2009 ல் ஊழல் செய்ததால் தான், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. கருணாநிதி மகன் அழகிரி மதுரையில் பேட்டியளித்த போது, பாலு ஊழல் செய்தது குறித்து பேட்டி அளித்தார். அதில் நான் சொன்னதை தான் அவரும் கூறியிருந்தார். ஆனால், அழகிரி மீது பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை. என் மீது மட்டும் தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த சத்திய பிரமாணத்தில் 3 நிறுவனங்களில் பங்கு தாரராக உள்ளேன் எனக்கூறியுள்ளார். ஆனால், ‛டிஎம்கே பைல்சில்’ அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து உள்ளது தெளிவாக கூறப்பட்டு உள்ளது. பாலு, அவரது மகன் ராஜா, மற்றொரு மகன் ராஜ்குமார் ஆகியோர் எந்தெந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளனர்.

ஆனால், சத்திய பிரமாணத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். எந்த குடும்பத்தையும் அரசியலில் இழுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. எங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டிஆர் பாலு குடும்பத்தினர் அனைவரையும் நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டும். இதனை நீதபதியிடம் வலியுறுத்துவோம் . அவர்களிடம் நாங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களிடம் அவர்கள் கேள்வி கேட்கலாம். நாங்கள் எப்போதும் இங்கு இருப்போம். நெஞ்சவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதித்து நாடகம் ஆட மாட்டோம்.
வாரிசு அரசியலால் உருவான 3ம் தலைமுறையினருக்கும், முதல் தலைமுறையினருக்கும் நடக்கும் யுத்தம். ஊழலுக்கு எதிரானவர்கள் எங்களுடன் இணைய வேண்டும். தற்போது நடப்பது 3வது தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் இடையே நடக்கும் யுத்தம் ஓரிரு நாட்கள் நடப்பது கிடையாது. நீண்ட யுத்தம். அவர்களிடம் அதிகார பலம், பண பலம் உள்ளது.


‛டிஎம்கே பைல்ஸ்’ 2வது பாகம் தயாராக உள்ளது. இது 300 பினாமி சொத்து பற்றியது. இதனை மக்கள் நீதிமன்றத்தில் வெளியிடுவதா அல்லது கவர்னரிடம், சிபிஐ முன்பு அளிப்பதா என விசாரித்து வருகிறோம். பாத யாத்திரைக்கு முன்பு வெளியிட ஆலோசிக்கிறோம். பாத யாத்திரையின் போது 3 மற்றும் 4வது பாகம் வெளியே வரும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *