
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜ் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 124 ஆவது பிறந்தநாளையொட்டி பதிவிட்டுள்ளார். அதில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜ் என்று புகழாரம் சூட்டியுள்ளார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பதிவில், தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை காமராஜர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து வணக்கத்தை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்தவர் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் உதயநிதி தனது சமூக வலைத் தளப் பதிவில், தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் அவருக்கு தன் புகழ்வணக்கத்தை செலுத்தினார். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் என்று நினைவு கூர்ந்தார். தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாட்டில் என்று நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளப் பதிவில், பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,என தமிழகத்தின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். விவசாயம் செழிக்க, அணைகள் பலதந்த மாமனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தில் அவர் தம் பெரும் புகழை போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.




