சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ், சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் உறுதி செய்ததாகக் குறிப்பிட்ட அன்புமனி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை அரசுக்குப் பரிந்துரைக்கவில்லை என்றார். இது தொடர்பாகப் பலமுறை அரசிடம் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைச் சாதி பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது என்ர அவர், அது சமூக நீதி பிரச்சனை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சாதிவாரி கணக்கெடுப்புக்கும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றதுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 1980ம் ஆண்டுகளிலிருந்து பாமக வலியுறுத்தி வருவதாகவும், அதனால் பல போராட்டங்களை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
தங்களது கோரிக்கை உள் ஒதுக்கீடு கொடுங்கள் என்பது மட்டும் தான் என்றும், எம்பிசியில் வன்னியர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

