
அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளாரென அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதை மறைத்து அமெரிக்கர்களிடமிருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 5-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மோடியும் அதானியும் ஒன்றுதான் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி எம்பிக்கள் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

