Advertisements

தமிழக அரசியலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி சேர்ந்து விட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி என இறுதி முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் .
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத கால இடைவெளி தான் இருக்கிறது . அடுத்த மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்பு மனு தாக்கல் தொடங்கி விடும் . அதற்கு முன்னதாகவே தேர்தலில் களம் காண விரும்பும் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் தொடங்க முடியும். இந்த நிலையில் , தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது உறுதியாக இருக்கிறது . ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை சட்டசபை தேர்தலில் களம் கண்ட தேமுதிக நான்காவது முறையாக போட்டியிட இருக்கும் நிலையில் இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது .
தற்போதைய சூழ்நிலையில் , அதிமுக வுடனும் , திமுகவுடனும் பிரேமலதா விஜயகாந்த் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் . தேமுதிகவை பொருத்தவரையில் தொடக்க காலத்தில் 10.5 சதவீத வாக்கு வங்கி இருந்தது . தற்போது ஒரு சதவீதத்திற்கும் கீழாக இறங்கி விட்டது.. இதனால் அதிமுக தரப்பிலும் திமுக தரப்பிலும் தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் தர விரும்ப வில்லை.
ஆனால் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் இருதரப்பிலும் 10 தொகுதிகளுக்கு மேல் தர வேண்டும் . ராஜ்யசபா சீட்டு ஒதுக்கி தரப்பட வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்றெல்லாம் ஏராளமான கோரிக்கைகளை வைத்து வருகிறார் .
அந்த வகையில் திமுக தரப்பில் 6 தொகுதிகள் தருவதாகவும் அதிமுக தரப்பில் எட்டு தொகுதிகள் தருவதாகவும் பேசப்பட்டு வருகிறது . இதனிடையே சென்னையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதாவும் கலந்து கொள்ளும்படியான ஏற்பாடுகள் நடைபெற்றன.
ஆனால் கடைசி கட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் ஒரு அமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிரேமலதா விஜயகாந்த் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை . இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும் பொழுது கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எந்த காலகாமதமும் செய்யவில்லை. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை யார் யார் எந்த தொகுதி என்று அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிக்கவில்லை .
எனவே இன்னும் நேரம் இருக்கிறது . பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள் . அதனால் நிறைய நேரம் இருக்கிறது. தேமுதிக எங்கள் குழந்தை அவர்களுக்கு எப்போது என்ன நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள் பொறுப்புகள் இருக்கின்றன. அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியாக அமைப்போம் என்றார் .
அப்பொழுது , திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடப்பதாக சொல்கிறார்களே என நிருபர்கள் கேள்வி கேட்டனர் . இதற்கு பதிலளித்த பிரேமலதா எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . தினம் ஒரு செய்தி வருகின்றன இதற்கு நான் பதில் சொல்ல முடியாது உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்துச் சொல்வேன் என்றார் .
இதனை தொடர்ந்து , தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என நிருபர்கள் கேட்டனர். பிரேமலதா விஜயகாந்த் இதற்கு பதில் சொல்லும் பொழுது அதுவும் இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர போவதாக பேச்சு வார்த்தைகள் இருக்கின்றன . எதுவும் இங்கு முடிவாகவில்லை . அதனால் எந்த நேரமும் எது வேண்டுமானாலும் மாறலாம் யார் வேண்டுமென்றாலும் எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
ஆனால் தேமுதிகவை பொறுத்தவரை நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் ஒரு தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவை எடுப்போம் என்றார் . இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டதாக மோடி பேசியது குறித்து கேட்ட கேள்வி கேட்கப்பட்டது . இதற்கு பதில் அளித்த பிரேமலதாவிஜயகாந்த் எப்படி இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. அது நல்ல ஆட்சியாக மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை என்றார் .
இதன் மூலம், அவர் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைவதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது . இருந்தபோதிலும் பிப்ரவரி முதல் வாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் தனது இறுதி முடிவை வெளியிடுவார் என தெரிகிறது.
Advertisements



