
ஆலந்தூரில் போலீஸ் குடியிருப்பு சிமெண்ட் கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, கூரை விழுந்த நேரம் குழந்தைகள், பெரியவர்களின் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
சென்னையை அடுத்த ஆலந்துார் எம்.கே.என்.சாலையில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக இந்தக் குடியிருப்பில் எந்தவித பராமரிப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை. அங்குள்ள விளையாட்டு மைதானம் பொலிவிழந்து காணப்படுகிறது. குடியிருப்பின் வெளிப்புற பகுதியில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகின்றன.
மழைக்காலத்தில் மேல் மாடியிலிருந்து மழைநீர் முறையாக வெளியே வழி செய்யப்படவில்லை. இதனால், பல வீடுகளில் மேல் தளத்தில் கசிவுகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் குடியிருப்பின் 15வது பிளாக் மூன்றாவது மாடியின் படிக்கட்டு மேற்கூரை முன்பக்கம் சிமென்ட் கூரை நேற்று மதியம் திடீரென உடைந்து விழுந்தது. 35 அடி உயரத்திலிருந்து கூரை விழுந்தில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று நொறுங்கியது.
எப்போது அப்பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்.நல்லவேளையாகக் கூரை விழுந்த நேரம் குழந்தைகள், பெரியவர்களின் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
மேற்கூரையில் விரிசல் விட்ட இடத்தில் செடிகள் வளர்ந்திருந்தன. அதனால், விரிசல் அதிகரித்து கூரை சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

