
இந்திய விமானப் படைக்கு ஏா்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ (Airbus C295) ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவா் ரெமி மெய்லாா்டு உறுதி…
ஏா்பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான சி-295 ரக போக்குவரத்து விமானம், 10 டன்கள் வரை சுமை தாங்கிச் செல்லும் திறன்கொண்டது. இந்த விமானம் 71 வீரா்கள் அல்லது 50 பாராசூட் படைப்பிரிவு வீரா்களைச் சுமந்து செல்லும். மேலும், குறுகிய அல்லது ஆயத்தமில்லாத ஓடுதளங்களிலும் இந்த விமானத்தை இறக்கவும் மேலெழும்பச் செய்யவும் தகுதி வாய்ந்தது.
விமானப்படையின் தற்போதைய கனரக விமானங்கள் அணுக முடியாத இடங்களில் தளவாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த சி-295 ரக விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில், பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்காக 56 சி-295 ரக போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு ஏா்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தத்தில் ஈடுபட்டது.
ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினில் உள்ள ஏா்பஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் 16 விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். இந்தியாவின் வதோதராவில் ஏா்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் அமைக்கும் தொழிற்சாலையில் மற்ற 40 விமானங்கள் உருவாக்கப்படும்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 விமானம் இந்திய விமானப் படைக்கு இந்த மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவா் உறுதிப்படுத்தினாா்.

விமானத் துறையில் பொறியாளா்களுக்குப் பயிற்சியளிப்பதற்கு மத்திய அரசின் கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகம் மற்றும் ஏா்பஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது. இதையடுத்து நடந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற ஏா்பஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ரெமி மெய்லாா்டு கூறுகையில், ‘முதல் சி-295 விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் வி.ஆா்.சௌதாரி ஸ்பெயினில் உள்ள செவில் நகருக்கு விரைவில் செல்ல இருக்கிறாா். வரும் 2026-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் விமானத் தயாரிப்பு தொடங்கப்படும்’ என்றாா்.

