மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு..!

Advertisements

திருவனந்தபுரத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 150 பேருடன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதைச் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து தில்லிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் சென்றுகொண்டிருந்தது. வானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானத்தைச் சென்னை விமான நிலையத்தில் ஞாயிறு இரவு பதினொன்றரை மணிக்கு அவசரமாகத் தரையிறக்கினர்.

விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமானத்தில் இருந்த 150 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டுச் சென்னை விமான நிலைய ஓய்வுறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன்பின் ஏர் இந்தியா அதிகாரிகள் இரவு ஒரு மணிக்குப் பயணிகளை மாற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து தில்லிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *