
வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் முறைகேடு ஆகியன குறித்துத தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தில்லிக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்னும் பெயரில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவது, அதே நேரத்தில் ஒரே முகவரியில் ஐம்பதுக்கு மேற்பட்டோரைச் சேர்ப்பது எனத் தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளைச் செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் முறைகேடு ஆகியன குறித்துத தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கக் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் சென்றனர்.
தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகவும், பாஜக அரசின் முறைகேட்டுக்குத் தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் கூறி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சியினரின் பேரணி தேர்தல் ஆணையத்தின் முன் வந்தபோது அங்கே தடுப்புகளை ஏற்படுத்திய காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையரைச் சந்திக்கத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.


