ASICON 2018 CHENNAI: மேலும் ஒரு சரச்சையில் ஏ.ஆர். ரஹ்மான்!

இசை நிகழ்ச்சி ரத்தானதால் முன்பணமாகப் பெறப்பட்ட ரூ.29.50 லட்சத்தை ஏ.ஆர். ரஹ்மான் திரும்பத் தரவில்லை என்றும், அவர் முன் தேதியிட்டு கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆகியதாகவும் மருத்துவர்கள் தரப்பில் புகார் அளித்திருந்தது. அந்த மோசடி புகாரில் ஏ.ஆர். ரஹ்மானிற்கு எந்தத் தொடர்பும் இல்லையெனத் தி குரூப் நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவர் அசோசியேஷன்ஸ் அளித்திருந்த மோசடி புகாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் தொடர்புடைய நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், ”2018ம் ஆண்டு “ASICON 2018 Chennai” என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறுசில  நிகழ்ச்சிகளை  நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்கள்.  நாங்கள் ஏ.ஆர். ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அப்போது ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலையென இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பித் தரப்படாது எனக் குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்கத் தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட  அனைத்து விஷயங்களும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு  கையெழுத்தானது.

“ASICON 2018 CHENNAI” நிகழ்வில் அதிக தொகை செலவிட இருந்ததால் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழலல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட 25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்குத் திருப்பி வழங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட  காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரகுமானுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த நிலையில் தேவை இல்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை இந்தப் புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது.

அந்த அமைப்பினர் காசோலை கொடுத்ததாகக் குறிப்பிடுவது வேறு நிகழ்ச்சிக்கானது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,  கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்கத் தேவையில்லை.

எங்கள் நிறுவனத்தின் (The Group) மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.  மேலும் அந்த அசோசியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர்வோம்” எனக் கூறியுள்ளனர். ஏற்கெனவே சென்னையில் நடந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் ஏ.ஆர். ரஹ்மான் சர்ச்சைகளில் சிக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *