
சென்னை:
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகளான சுதாகர் என்பவரைச் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகி இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் குற்றவாளிகளிடமிருந்து பணம் வாங்கி தருவதாகப் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் புகார் அளித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும், புகாரிலிருந்து ஒரு சிறுவனின் பெயரை நீக்க வேண்டும் எனத் தங்களை தாக்கியதாகச் சிறுமியின் தாய் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சிறுமி வன்கொடுமை:
இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் சிறுமியின் பெற்றோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டபோது சிபிஐ விசாரணைக்குத் தடை விதித்த நீதிமன்றம் தமிழகம் அல்லாத ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த வழக்கில் அதிமுகவின் 103வது வட்ட செயலாளர் சுதாகர், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுக் கைது செய்து இருக்கிறது. புகார் அளிக்க வந்தவரைத் தாக்கியதோடு புகார்குறித்து நடவடிக்கை எடுக்காத புகாரில் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகி கைது:
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதில் குற்றவாளி தரப்பு சுதாகரை அணுகி உள்ளது. அப்போது கட்டப்பஞ்சாயத்து பேசி இருக்கிறார் சுதாகர்.
மேலும் புகாரில் சிறுவன் ஒருவனின் பெயரைக் குறிப்பிடக் கூடாது பாதிக்கப்பட்ட சிறுமியின் நடந்ததை சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதோடு புகார் அளிக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு பல லட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாகச் சுதாகர் பேசியிருக்கிறார்.
கட்டப்பஞ்சாயத்து:
தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இந்தத் தகவல் தெரிய வந்ததையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டதாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் சுதாகர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் யார் அந்தச் சார்? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவர்தான் அந்தச் சாரெனத் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.



