Afghanistan Earthquake: 14 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் தீவிரவாத குழுக்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலும், பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூடும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றத்திற்கிடையே, ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஹெராட்டின் வடமேற்கில் 40 கிலோ மிட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் அச்சத்தில் மக்கள்  வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. முதல் நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9, 4.6 என அடுத்தடுத்து ஐந்து முறை நில அதிர்வு உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது ரிக்டர் அளவில் நில நடுக்கம் 5.9 ஆக பதிவாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *