கமேனி படு*கொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்.!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிக் கலைத்தனர். ஈரானில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், ரம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஏராளமான சியா முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் லடாக்கின் லே நகரிலும், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவிலும் சியா முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகரில் இரண்டாம் நாளாக இன்றும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்துப் போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் வகையில், அவர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதேபோல் காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலைக் கண்டித்து இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை மூளும் அபாயம் உள்ளது குறித்துப் பல்வேறு மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில் ஈரானுக்கு ஆதரவான இத்தகைய போராட்டங்களில் மத உணர்வைத் தூண்டி ஆத்திரமூட்டும் வகையில் பேசுவோரை அடையாளம் காணுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *