
ஊழல் ஒழிப்பை பெயரளவில் அல்லாமல், செயலளவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தவெக நிர்வாகி ஒருவர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊழல் ஒழிப்பு குறித்து திரைப்பட வசனங்களைப் பேசும் முதல்வர் ஜோசப் விஜய், தனது கட்சியில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அவற்றை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை முழுமையாக விசாரித்து, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊழல் ஒழிப்பை பெயரளவில் அல்லாமல் செயல்முறையிலும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





