ஊழலில் சிக்கியுள்ள திமுக, அதிமுக.,வை பற்றி பேச தகுதியில்லை! அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சனம்!

Advertisements

புதுடில்லி: ‘ஊழலில் சிக்கியுள்ள திமுகவுக்கு அதிமுக.,வை பற்றி பேச அருகதையும் இல்லை, தகுதியுமில்லை’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 18) டில்லியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். இன்று சென்னை திரும்புவதற்கு முன்னதாக டில்லியில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கோவிட் வைரஸ் தொற்றின்போது உலகமே பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதும், இந்தியாவில் அந்தளவிற்கு இல்லை. அதனை தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக கையாண்டது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபின் 9 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் 330க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயம் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும். நேற்றைய கூட்டத்தில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பல கட்சிகள் பங்கேற்றன.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு மட்டும்தான். காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தான் 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி கைதாகினர். ஊழலில் சிக்கியுள்ள திமுகவுக்கு அதிமுக.,வை பற்றி பேச அருகதையும் இல்லை, தகுதியுமில்லை.

எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பல கட்சி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறை பிடியில் உள்ளனர். என்மீது கூட திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். பொய்யான வழக்கு தள்ளுபடியானது நீதிக்கு கிடைத்த தீர்ப்பு. ரத்து செய்யப்பட்ட டெண்டரில் நான் ஊழல் செய்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் திமுக.,வை தாங்கிப்பிடிக்கிறார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது, அவர்களை கைது செய்தது, வழக்கு நடந்தது அதிமுக ஆட்சியில். ஆனால், அவர்களுக்கு ஜாமின்தாரராக இருந்தது திமுக. கொடும் குற்றம் செய்தவர்களுக்கு திமுக.,வினர் ஜாமின் கொடுத்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கும், திமுக.,விற்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கில் தீர்ப்பு வரவேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் வேண்டுமென்றே எங்கள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை திமுக கையில் எடுத்துள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சட்டசபையில் தெரிவித்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் நோக்கம். எனவே சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணி அமைப்பது இயல்புதான். அதுபோல தான் நாங்களும் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக.,வும் 1999ல் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *