Adani Group: டார்கெட் செய்யும் வெளிநாட்டு அமைப்புகள்!

Advertisements

ஓ.சி.சி.ஆர்.பி., எனும் குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு, அதானி குடும்பத்தின் பார்ட்னர்கள் மொரிசீயஸ் பண்ட் ஒன்றிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளது…

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரியில் மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதனால் அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடைந்து தற்போது மீண்டு வந்திருக்கிறது. இந்நிலையில், ஓ.சி.சி.ஆர்.பி., எனும் அமைப்பு ரீதியான குற்றம் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தும் அமைப்பு அதானி குழுமத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கிளப்பியுள்ளது.

இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்பு, 2016ல் உலகளவில் பிரபலமானவர்களின் கறுப்பு பண முதலீடுகளைப் பனாமா பேப்பர் என்ற பெயரில் தொகுத்துள்ளது. அடுத்ததாக முக்கிய உலக தலைவர்களைப் பெகாசஸ் எனும் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்த்த அரசுகளை அம்பலப்படுத்தியதில் இவர்களுக்கும் பங்கு உண்டு. இவ்வமைப்பிற்கு உலகளவில் புலனாய்வு பத்திரிகையாளர்கள் உண்டு.

இவர்கள் தற்போது அதானி குழுமத்தைத் தொட்டுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக அதானி குழுமப் பங்குகளை வாங்கி விற்றிருக்கும் இரண்டு வழக்குகளைத் தாங்கள் கண்டறிந்ததாகக் கூறியுள்ளனர்.நாசர் அலி ஷபான் அலி மற்றும் சாங் சுங்-லிங் ஆகிய இருவரும், அதானி குடும்பத்துடன் நீண்டகால வணிகத் தொடர்பில் இருப்பவர்கள்.

கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களில் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக அதானி குழுமப் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம்மூலம் வாங்கி, விற்று லாபம் பார்த்துள்ளனர் என அவ்வமைப்பு குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், அதானி குழுமத்தைத் திட்டமிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் குறி வைப்பதாகச் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் முக்கிய நன்கொடையாளராக இருப்பதாகவும், இவர் அதானி விவகாரத்தில் ஏற்கனவே மோடி மீது விமர்சனம் வைத்தவர்.

தற்போது அவரிடம் நன்கொடை பெறும் அமைப்பும் அதானி குழுமத்தை டார்கெட் செய்துள்ளது. இது திட்டமிட்ட ஒன்று எனச் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.அதானி குழுமம் ஓ.சி.சி.ஆர்.பி., யின் குற்றச்சாட்டை ரீசைக்கிள் எனக் கூறியுள்ளது.

அதானி ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நிறுவனத்தையே மறுபதிப்பு செய்து புதிய அறிக்கையாகத் தந்துள்ளனர் எனக் கூறி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *