
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்யின் தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யிடம் ஏராளமான மூட நம்பிக்கைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதுகுறித்த செய்தியைப் பார்க்கலாம்….
முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்யின் செயல்பாடுகளில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஜோதிட ரீதியாக விஜய் பல சென்டிமென்ட்களை கடைபிடித்து வருகிறார். தன்னுடன் பல ஆண்டுகள் பயணித்துவரும் ஜோசியரும், அரசியல் ஆலோசகருமான ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை தனது அரசியல் ஆலோசகராக அரசுப் பதவியில் நியமித்தார் விஜய். இது அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்குள்ளானது.
விமர்சனங்கள் கடுமையானதை அடுத்து ஜோசியர் பண்டிட்டின் நியமனத்தை முதலமைச்சர் விஜய் திரும்ப பெற்றார். பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கட்சித் தொடங்கிய போது அறிவித்த விஜய், கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய தலைவர்களை தங்கள் வழிகாட்டியாக அறிவித்தார். ஏனென்றால் இந்த 5 பேரும் மூட பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர்கள் என்பதால்தான்.
இதேபோல்தான் இந்துத்துவா கொள்கைகளுக்கும் மூட பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவாக பாஜக இருப்பதால் அந்தக் கட்சியை தனது கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்தார்.மேலும் திராவிடமும், தமிழ்த் தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று விஜய் தனது மாநாடுகளில் கூறிவந்தார். மதச்சார்பற்ற அரசாகவே தனது அரசு செயல்படும் என்று அறிவித்திருக்கும் விஜய், மூட நம்பிக்கையில் மூழ்கியிருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
அந்த வகையில் விஜய் தனது நெற்றியில் வைக்கும் கருப்புத் திலகத்தின் பின்னணியில் கூட சுவாரஸ்யமான ஒரு சென்டிமென்ட் இருப்பதாக சொல்கின்றனர்…அது என்ன சென்டிமென்ட்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தனது நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைக்கத் தொடங்கிய விஜய், இப்போதும் அதே தோற்றத்தில் உள்ளார்.கூடுதலாக இப்போது கருப்புக் கோட்டுடன் வலம் வரத் தொடங்கி விட்டார். அதுமட்டுமல்ல, நெற்றியில் கருப்புப் பொட்டு வைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார். இதை அரகஜா திலகம் என்று சனாதனவாதிகள் சொல்கின்றனர். ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தை நம்பும் பெரிய மனிதர்கள் தங்களின் வெற்றிக்காக அரகஜா திலகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தெய்வீக மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் அரகஜாவுக்கு பயங்கர சக்தி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சாதாரண நாட்டு மருந்துக் கடைகளில் கூட இந்த அரகஜா கிடைக்கிறதாம். இதை பயன்படுத்துவோர் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும் என பலர் நம்புகிறார்கள். புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் ஆகியவற்றுடன் அரிய வகை மூலிகைகள், நறுமணப் பொருட்கள் மூலம் அரகஜா திலகம் தயாரிக்கப்படுகிறது. பல அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் அரகஜா திலகம் வைப்பார்கள்.
விஜய் ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவரும் இப்படிப்பட்ட சென்டிமென்டுகளை தொடர்ந்து பின்பற்றுவதாக சொல்கின்றனர். இந்தப் பழக்க வழக்கங்களை ஒரு தனிப்பட்ட நடிகர் விஜய் பின்பற்றினால் அது விமர்சனத்துக்கு உள்ளாக வாய்ப்பிருக்காது.. ஆனால் மதச்சார்பற்ற ஒரு நாட்டின் மாநில முதலமைச்சராகி விட்ட விஜய் மதக்குறியீடுகளை இட்டுக் கொள்வதும், மூட நம்பிக்கைகளை ஆதரிப்பதும் போன்ற செயல்பாடுகள் தான் சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.


