Kolkata female doctor Murder case: விசாரணை நேரலையை நிறுத்த முடியாது- சுப்ரீம் கோர்ட்டு!

Advertisements

நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் கபில் சிபல் தெரிவித்தார்.

புதுடெல்லி:மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கைப் போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்குப் பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் எனக் கோரியும், சம்பவ நாளிலிருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்தது. விசாரணை தொடங்கியதும், மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த வழக்கின் நேரடி ஒளிப்பரப்பை நிறுத்தக் கோரினார். மேலும் நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது நீதிபதிகள், “பயிற்சி டாக்டர் கொலை தொடர்பான விசாரணை நேரலையை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது என்றும் இது பொது நலம் சார்ந்த விஷயம் என்றும் நீதிமன்ற அறையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினர். மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் பிறருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகச் சிபலுக்கு நிதிபதிகள் உறுதியளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *