
திருட்டு வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சென்றபோது காவல்துறையின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய இரண்டு குற்றவாளிகளைக் கோபி போலீசார் கைது செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் அருகே கடத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிரிபாளையம் பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் கொள்ளையடித்த வழக்கில் சேது மற்றும் அஜீத் ஆகிய இரண்டு குற்றவாளிகளைக் கடத்தூர் காவல்துறையினர்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையலடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேது, அஜித் மற்றும் பரணி ஆகிய மூவரையும் சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் நடைபெற்ற கோயில் உண்டியல் கொள்ளை வழக்கில் விசாரணை நடத்துவதற்காகப் போலீஸ் காவலில் எடுத்து வந்தபின் மூவரிடமும் விசாரணை நடத்திமுடித்த பின் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 ல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தின் வெளியே காத்திருந்தனர்.
அப்போது மூன்று கைதிகளுக்கும் உணவு வாங்கிக் கொடுக்கப்பட்டதாகவும், உணவினை அருந்தி முடித்துவிட்டு கைக்கழுவ செல்லும் நேரத்தில் நீதிமன்ற வளாகத்திலிருந்து சேதுவும், அஜித்தும் போலீசார் பிடியிலிருந்து ஆளுக்கொருபுறம் தப்பியோடினர்.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவல்துறையினர் தப்பியோடிய இருவரையும் பிடிக்க முயன்றபோது இருவரும் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடினர்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிய 2 குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில் சிறுவலூர் நம்பியூர் கவுந்தப்பாடி பங்களாபுதூர் வரப்பாளையம் உள்ளிட்ட காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய குற்றவாளிகள் அஜித் மற்றும் சேது ஆகிய இருவரையும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகில் உள்ள தொரவலூர் பகுதியில் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தப்பியோடி பிடிபட்ட அஜித் மற்றும் சேது ஆகிய இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் மீண்டும் சிறையிலடைத்தனர்.

