Magic Mushrooms: கூண்டோடு சிக்கிய கும்பல்!

Advertisements

நூதன முறையில் போதைக்காளான்களை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்கும் கும்பல் இயங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைக்காளான் தேடிச் சென்ற இளைஞர் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை போராடி மீட்டனர். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் போதைக்காளான் கும்பல் தலைமறைவாகியது. தற்போது மீண்டும் போதைக்காளான் விற்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி. மதுமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ், தலைமைக்காவலர்கள் சரவணன், காசிநாதன் மற்றும் போலீசார்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் 7 ரோடு ஜங்சன் பகுதியில் போதைக்காளான் விற்ற கல்லுக்குழியை சேர்ந்த சுரேஷ் (56), பள்ளங்கி மாட்டுப்பட்டியை சேர்ந்த தங்கத்துரை (32) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்ட சாலமன் (53), ஜெயந்தி (43), விக்டோரியாராணி (28) ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக அருண் (35), ஹெலன்மேரி (23) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போதைக்காளான் விற்பனைக்கு தங்கத்துரை மூளையாக செயல்பட்டார். சாலமன் மற்றும் அவரது குடும்பத்தினர், கூரியர் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர். போதைக்காளான்களை கூரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர்.

தெரிந்த நபர்களுக்கு மட்டுமே போதைக்காளான் விற்றுள்ளனர். மேலும் வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அதிக அளவில் வெளியே தெரியாதவாறு போதைக்காளான்களை நூதன முறையில் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *