
தென்கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள ரோகிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகின. இதனால், 7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் வீடுகளின்றி உள்ளனர்.
டாக்கா: வங்காளதேச நாட்டின் காக்ஸ் பஜார் என்ற எல்லை பகுதியையொட்டிய மாவட்டத்தில் ரோகிங்கியா சமூகத்தினர் லட்சக்கணக்கில் அகதிகளாக முகாம்களில் தங்கி உள்ளனர்.
இவர்கள் மியான்மர் நாட்டிலிருந்து வந்த முஸ்லிம் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் ஆவர். எனினும், 2017-ம் ஆண்டு நடந்த ராணுவ ஒடுக்குமுறையால், அவர்களில் பலரும் முகாம்களிலிருந்து தப்பி வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில், தென்கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள ரோகிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகின. இதனால், 7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் வீடுகளின்றி உள்ளனர்.
இதன்பின் தீயணைப்பு படையினர் மற்றும் ரோகிங்கியா தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீக்கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தீ விபத்தில் வீடுகள் தவிர, கல்வி மையங்கள், மசூதிகள் மற்றும் சுகாதார நல மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்களும் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து உள்ளன.
இதுபற்றி அகதிகளுக்கான அரசு துணை பொறுப்பு அதிகாரி முகமது ஷாம்ஷத் தவுசா கூறும்போது, அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருக்கிறோம். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறியுள்ளார். தீ விபத்திற்கான காரணம் தெரிய வரவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் முகாம்களில் இருந்த 15 அகதிகள் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 12 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 2,800 கூடாரங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி மையங்கள் என 90 மையங்களும் தீயில் அழிந்து விட்டன. திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிவேலையென இதுபற்றிய விசாரணை குழு தெரிவித்து இருந்தது.

