
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவியை 50 இலட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூருக்குச் செல்லும் வழியில் சென்னை விமானநிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 இலட்சம் நிதியுதவி போதாது என்று கூறிய அவர், நிதியுதவியை 50 இலட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
காவல்துறையின் பாதுகாப்புக் குறைபாடு தான் கூட்ட நெரிசலுக்குக் காரணமா என்று வினவியதற்கு, துயரத்தில் நாம் உறைந்து கிடக்கிற போது இவர்தான் காரணமா? அவர்தான் காரணமா? என்று குற்றம் சுமத்தும் வகையில் பேசுவது ஏற்புடையதாக இருக்காது எனத் தெரிவித்தார்.


