
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்குப் பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் விளையாட்டுப் பயிற்சி அளிக்கும்போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அடைக்கலம் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது,
கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலைத் தொடுவதாகவும்.
மேலும் முகம் பார்த்துப் பேசாமல் உடலின் அங்கங்களைப் பார்த்துப் பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
மணப்பாறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
