
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 15,000 டன் கிலோ ஜிப்சம் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலைக்குள் குவிந்துள்ள 1.50 லட்சம் ஜிப்சத்தை அகற்ற அனுமதி அளித்தது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்ட பின் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தனர். கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் பணியில் இதுவரை 15,000 டன் ஜிப்சத்தை அப்புறப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜிப்சம் சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் முன்னணி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் வேதாந்தாவிடம் இருந்து ஜிப்சத்தை மொத்தமாக வாங்கியுள்ளன. இதுவரை 10% ஜிப்சத்தை விற்றுள்ளதாகவும் மீதமுள்ள ஜிப்சத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
