
Karutharajapalayam | Salem | Attur | No terrace
தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் கருத்தராஜபாளையம் மக்கள் பின்பற்றும் கட்டுப்பாடுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருத்தராஜபாளையம் எனும் கிராமத்தில் பின்பற்றப்படும் விநோத கட்டுப்பாடுகள் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது…
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியகரை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் தான் கருத்தராஜபாளையம். இந்தக் கிராமத்தில் ஓட்டு வீடு, குடிசை வீடு வீடு, கல்நார் தகடு வீடு போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால், கான்க்ரிட் வீடுகளையே, அடுக்குமாடி வீடுகளையோ பார்க்க முடியாது. காரணம், கான்க்ரீட் வீடு கட்டினால் சாமி குத்தமாகிவிடும் எனக் கூறுகின்றனர். இதனால், கடந்த 150 ஆண்டுகளாகவே கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் மட்டுமே பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த அளவிற்கு அவர்கள் பயப்படும் அந்தக் கடவுள்களின் பெயர் ஊரின் காவல் தெய்வங்களன கருப்பசாமியும், பெரியசாமியும் தான்.
இரவு நேரங்களில் பெரியசாமி வேட்டைக்கு செல்வதாகவும், அவரே ஊரைக் காப்பாற்றி வருவதாகவும், கருத்தராஜபாளையம் கிராம மக்கள் நம்புகின்றனர். அவருக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு வீடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கிராமத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். காவல் தெய்வமே திறந்த வெளியில் இருக்கும்போது அவருக்கும் உயரமான இடத்திலிருந்து, கடவுளைப் பார்க்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இதுநாள் வரை அங்கு ஒரு கான்கிரீட் வீடு கூடக் கட்டியதில்லை. வீடுகளில் படிகட்டுகள் கூட அமைக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் தெய்வம் வேட்டைக்கு செல்வதால் கோயில் வளாகத்தில் கூட மின் விளக்குகள் போடுவதில்லை.
ஊர்க்கட்டுப்பாடு தொடர்பாகப் பேசும் அந்தக் கிராம மக்கள்“ தொட்டில் சத்தம் சாமிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வீடுகளில் தொட்டில் கட்டாமல், தரையில் தான் குழந்தைகளைத் தூங்க வைப்போம். கோவில் உள்ளிட்ட விழாக்களில் நடத்தப்படும் விருந்தில் கூடத் தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். உளி சத்தம் கேட்கக் கூடாது என்பதால் இங்கு, கிராமத்தில் குயவர், தச்சர்களே இல்லை. ஊருக்குள் புதியதாக வருபவர்களும், உறவினர்களும் இரவில் தங்குவதில்லை. காவல் தெய்வத்தின் கட்டளையை மீறினால் அசம்பாவிதம் ஏற்படுவதோடு, ஆண் வாரிசு இல்லாமல் போய்விடும்” என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அண்மையில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிகட்டு கட்ட முயன்றவர்களை கூட, கிராம மக்களே விரட்டி அடித்துள்ளனர்.
Karutharajapalayam | Salem | Attur | No terrace
கருத்தராஜாபாளையம் கிராமத்தில் உள்ள 200-க்கும் அதிகமான குடியிருப்புகளில் சுமார் 700 பேர்வரை வசிக்கின்றனர். 1996ல், 32 பேர் தொகுப்பு வீடு கட்டினர். தெய்வ குற்றம் ஏற்பட்டதாகக் கூறி, ஆறு பேர், கான்கிரீட் மேல்தளத்தை அகற்றி, ஓடு வீடு அமைத்தனர். மீதமுள்ளவர்கள், மேல்தளத்தில் ஓடுகளைப் பதித்தனர். 2010ம் ஆண்டு முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தில், 26 பேருக்கு உத்தரவு வழங்கியும் வீடு கட்டாததால் அந்த வீடுகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் 35 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டபோதும், கருத்தராஜாபாளையம் மக்கள் ஒருவர் கூடக் கான்கிரீட் வீடு கட்ட முன்வரவில்லையென அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்தராஜபாளையம் மக்கள் இந்த அளவிற்கு பயப்பட காரணமாக அமைந்தது அந்தக் கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் தான். ஊர்க்கட்டுப்பாட்டை மீறிச் சில ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீடு கட்டியவர்களின் குடும்பத்தில், ஆறு பேர் இறந்துவிட்டதாகவும், அவர்களது குடும்பம் தற்போது வரை முனேற்றத்தையே காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இதெல்லாம் மூட நம்பிக்கையெனக் கூறி சில பேர் கான்க்ரீட் வீடுகளைக் கட்ட முயன்றபோது, அவர்களது குடும்பத்திலும் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது போன்ற எதேர்ச்சையாக நடந்த சம்பவங்கள் தான் மக்களை மிகவும் அச்சப்படுத்தியுள்ளன. இதன் விளைவாகவே, கான்க்ரீட் வீடெல்லாம் வேண்டாம் உயிர் தான் முக்கியம் என, கூரை மற்றும் ஓடு வீடுகளிலேயே கருத்தராஜபாளையம் மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

