
நாடு முழுவதும் கிராமப் புறங்களில் நிலம் மேம்பாடு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தவும் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்து வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அவர்கள் மத்திய அரசின் தொழிலாளர்கள் நலத்திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இது வரை மக்கள் வங்கி மூலமாக ஊதியம் பெற்று வந்தனர். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தி மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி இனிமேல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
அதாவது கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள் என்ற சலுகையானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தது.
இது குறித்து ஒரு விரிவான அறிக்கையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியாகாரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு மிக விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும்.
சில தில்லு முல்லு வேலைகள், பணிக்கு செல்லாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை கொள்ளையடிக்கப்படுவது முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டையை, பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சம்பளப் பணம் கிடைக்க வழி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

