
உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையைச் சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன் எனச் சீமான் கூறியுள்ளார்…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முன்னறிவிப்பு செய்து எந்தச் செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்குத் தமிழ்நாடு தான்.இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே.
ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் எனப் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே? பாரத் என்ற பெயரை எடுத்து விட்டு வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா? ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீர் பெற்று தர முடியவில்லை. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும்.
ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாகப் போட்டியிட்டால் எனது வேட்பாளரைத் திரும்பப் பெறுவேன். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாகத் திமுகவுக்கு ஆதரவு தருகிறேன் என்றார்.
மேலும் அயோத்தி சாமியார்குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையைச் சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் என்றார்.


