
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கண்காட்சி பள்ளி மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துறைகளான உடற்கூறியல் துறை, உடல் இயங்கியல் துறை, உயிர் வேதியியல் துறை ஆகியவற்றின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் இந்தக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.
கண்காட்சியில் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், உறுப்புகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உடலில் ஏற்படும் நோய் ஆகியன குறித்த பட விளக்கங்கள் பள்ளி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இது குறித்துப் பள்ளி மாணவ மாணவிகளிடம் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் விளக்கிக் கூறினர். பள்ளி மாணவ மாணவிகளை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ள இந்தக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
