
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், செயற்கைக்கோள் தடமறிதல் மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அப்போது, அரசு புதிய சுங்கக் கொள்கையைக் கொண்டுவர உள்ளதாகவும், விரைவில் நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த இரு வாரங்களில் புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சுங்கக் கட்டணம் பற்றி யாரும் புகார் அளிக்க வேண்டியது இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு செயற்கைக் கோள் தடமறிதல் மூலமாக அவற்றுக்கான சுங்கக்கட்டணம் நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும் என்பதால், இனிச் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
