மும்பை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குக் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

Advertisements

மும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதக்காலமாகத் தீவிரமடையாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் மகாராஷ்டிரத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்றுக் காலை  எட்டு மணி முதல் இன்று காலை ஏழு மணி வரை மும்பையில் 30 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தாதரில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்த நிலையில் சாலையோரம் நின்ற மரம் சாய்ந்து காரின் மீது விழுந்தது. மரத்தை வெட்டி அகற்றிப் போக்குவரத்தைச் சீராக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும் காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

சயான் சண்முகானந்தா அரங்கச் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் நவிமும்பையில் தானே – பேலாபூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர்  தேங்கியுள்ளது. மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே மண்டலங்களின் ரயில் பாதைகளில் தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன.

மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல் மும்பை, தானே, ராய்காட், பால்கர், சிந்து துர்க்கம் மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *