
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று பல பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்ததால் கடும் வெப்பம் நிலவியது. இதனால் இரவானாலும் வீடுகளில் புழுக்கமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலையிலேயே வானம் மேகமூட்டமாக இருந்தது. ஒன்பதரை மணியளவில் சென்னையின் பல பகுதிகளில் இலேசான மழை தொடங்கியது.
வள்ளலார் நகர், பிராட்வே, கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பரவலான இடங்களில் மழை பெய்துள்ளதாலும் தொடர்ந்து வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதாலும் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக அளவாகச் சேலம் மாவட்டம் மேட்டூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சம்புக்குட்டைப்பட்டி ஆகிய இடங்களில் 5 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
