
எல் நினோவின் தாக்கத்தால் தமிழ்நாடு உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமலையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு, வெப்பநிலை முறைகளை மாற்றியமைக்கும். குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படுவதுடன், மற்ற பகுதிகளில் பெருமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பொதுவாக 26 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியசாக இருக்கும். இந்த வெப்ப நிலையில் அரை விழுக்காடு கூடினால் எல் நினோ உருவானதாகப் பொருளாகும். இப்போது பசிபிக் பெருங்கடலின் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக உள்ளது. இப்போதைய ஆய்வுகளும் கணிப்புகளும் இந்த ஆண்டு இறுதியில் எல் நினோ வலுப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறுகியகாலப் பயிர்களைப் பயிரிடும்படி பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் குறைவாகத் தண்ணீர்த் தேவையுள்ள எள், பயறு வகைப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் மழைப்பொழிவு வழக்கத்தை விடக் குறைவாக இருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


