
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீக்கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் சென்றார்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (29) என்ற வாலிபர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது சீண்டல் எல்லை மீறிப் போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பேக்கரி கடைக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மாணவியின் புகாரின் பேரில் அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்:
நேற்று மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்துப் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்குச் சென்னை ஐ.ஐ.டி.யுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாணவிகள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம். எனத் தெரிவித்துள்ளனர்


