
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷனை இரட்டிப்பாக்குவதாகவும் கார்கே உறுதியளித்தார்.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குபதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரு தலைவர்களும், முதல் நான்கு கட்டங்களில் பாஜக வெற்றி பெறாது எனக் கூறினர். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷனை இரட்டிப்பாக்குவதாகவும் கார்கே உறுதியளித்தார். ஒடிசாவில் பிரசாரம் காரணமாக ராகுல் காந்தி இன்று இந்திய கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
“பாஜக இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தலின் (Lok Sabha Election 2024) நான்கு கட்டங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெறாது… அவர்களுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு பாஜகவிடம் பதில் இல்லை. முதலீடு, டிஃபென்ஸ் எக்ஸ்போ என்ற பெயரில் பொய்க் கனவுகளைக் காட்டி, ஜி – 20 கூட்டங்களில் போலியான விஷயங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்” என அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்தார்.
அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4க்குப் பிறகு ‘பொற்காலத்தை’ சந்திக்க உள்ள மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். “ஜூன் 4-ம் தேதி தொடங்கும் பொற்காலம், ‘பத்திரிக்கை சுதந்திரத்தின்’ நாளாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக விரும்புகிறேன். இந்திய கூட்டணி உத்தரபிரதேசத்தில் 79 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், இந்த முறை ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டம். “நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் அடிமைகளாகி விடுவோம். ஜனநாயகம் இல்லை, எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் இருந்தால், உங்கள் சித்தாந்தம் கொண்ட ஒருவரை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? பாஜக தலைவர் போட்டியிடுகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள்” என்று கார்கே கூறினார்.



