
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பொருளாதார நெருக்கடி கொடுப்பதன்மூலம் புடினின் செயலைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசின் தலைமையகத்தில் செலன்ஸ்கி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது, தோல்வியில் இருந்து நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டதாகவும், வெற்றியுடன்தான் போரை நிறைவு செய்வோம் என்றும் அவர் கூறினார். போர் நிறுத்தத்துக்கு விலையாகப் புடின் கேட்பதைக் கொடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தோற்றுவிட்டதாகவும், மாறாக அது பல்லாயிரம் படைவீரர்களைப் போரில் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூன்றாம் உலகப் போரைப் புடின் தொடங்கி விட்டதாகவும், இராணுவம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அளிப்பதன் மூலமே அவரை இதிலிருந்து பின்வாங்கச் செய்ய முடியும் என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டார்.


