தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபின் 600 ஜவுளி ஆலைகளும், 2 இலட்சம் விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைத் திமுக அரசு சீரழித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2021இல் திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழ்நாட்டில் 600 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளதையும், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முதன்மைக் காரணம் மின்கட்டண உயர்வு தான் என்றும், இதனால் ஜவுளி ஆலைகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத் திறன் இல்லாத, ஊழலில் மட்டுமே திளைக்கக் கூடிய திமுக அரசுக்குத் தொழில் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவர் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


