YS Sharmila Join Congress: காங்கிரஸில் ஐக்கியம்.. அடுத்தது என்ன?

Advertisements

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு ஷர்மிளா டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் நிருபர்கள், ”காங்கிரஸில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, ‘ஆம், அது போலதான் இருக்கிறது’ என்று கூறினார்.

ஹைதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, தானும் மற்ற தலைவர்களும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து டெல்லியில் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.

ஷர்மிளா பிரிக்கப்படாத ஆந்திராவின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஆவார்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தது  அரசியலில் மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸில் இணைந்தால், ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு தேசிய அளவில் கட்சியில் ஏதாவது பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுடன் அவரது கட்சி இணைந்த பிறகு, தென் மாநில தேர்தல் பொறுப்பாளராகச் சர்மிளா நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக ஷர்மிளா அறிவித்திருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *