Without Ticket:9 கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன்; டிக்கெட் இல்லாமலும் விமானத்தில் பறக்கலாம்!

Advertisements

பிராங்பர்ட்: விமான நிலைய சோதனைகளைக் கடந்து டிக்கெட் இல்லாமல் விமானத்தில் பறந்துள்ளார் நார்வே நபர் ஒருவர். 2வது நாளில் ஊழியர்களின் கண்ணில் சிக்கியதை அடுத்து, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே விமானத்தில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சிறிய சந்தேகம் வந்தாலும், உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படுவதுடன் கடுமையான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் சூழலில் நார்வேயை சேர்ந்த ஒரு நபர் தொடர்ந்து 2 நாட்களாக விமான நிலைய ஊழியர்களின் சோதனையிலிருந்து தப்பி, டிக்கெட்டே இல்லாமல் விமானத்தில் பறந்துள்ளார். 2வது நாளில் தான் சிக்கியுள்ளார்.

நார்வேயை சேர்ந்த 39 வயதான நபர் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, ஜெர்மனியின் பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றான முனிச் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு, பயணிகள் அனைவரும் விமான டிக்கெட்டை ஸ்கேன் செய்து, ஆட்டோமெட்டிக் நுழைவு வாயில் வழியாகச் செல்வதை பார்த்துள்ளார். அப்போது ஒரு பயணியின் பின்னால் நின்று கொண்டு, அவர் ஸ்கேன் செய்து செல்லும்போது இவரும் கூடவே சென்று அடுத்த படி நிலையை அடைந்தார். பின்னர் வாயிலில் இருந்த விமான ஊழியர்களையும் ஏமாற்றி விமானத்தில் ஏறினார்.

சீட் இல்லை

இவரது துரதிர்ஷ்டம் அந்த விமானத்தில் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் சீட் கிடைக்காமல் நின்றிருந்த அவரைப் பிடித்து விசாரித்ததில் மோசடியாக வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இருந்தும் அடங்காத அந்த நபர் அடுத்த நாளும் அதே ‘டெக்னிக்’ பின்பற்றி, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் செல்லும் விமானத்தில் ஏறினார். இப்போது சில சீட்கள் காலியாக இருந்ததால் அதில் ஒன்றில் அமர்ந்து விமானத்தில் பறந்துள்ளார்.

ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் விமான ஊழியர்களின் சோதனையில் சிக்கியதை அடுத்து, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிடிப்பட்ட அந்நபர் பயணிகளுக்கோ, விமானத்திற்கோ எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், சட்டவிரோதமாக ஒரு நாட்டிற்குள் நுழைந்து, போக்குவரத்து மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வளவு பாதுகாப்பு சோதனைகளையும் தாண்டி எப்படி அவரால் செல்ல முடிந்தது என்பது குறித்தும் முனிச் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *