
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கை விரல்களில் அழியும் மை வைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 869 இடங்களுக்கு 15 ஆயிரத்து 931 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத வகையில் 52 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
நேற்று காலை நடந்த தேர்தலில் வாக்குப் பதிவின்போது பாரம்பரிய முறைப்படி விரல்களில் மை இடுவதை தவிர்த்துவிட்டு, மார்க்கர் பேனாக்கள் மூலம் மை இடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, அழியக் கூடிய மை வைக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “மக்கள் ஜனநாயகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை தேர்தல் ஆணையம் கேள்விக் குறியாக்கியிருக்கிறது என்றும் வாக்குத் திருட்டு தேச விரோதச் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்..


