ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று கபில்சிபல் கேள்வி.!

Advertisements

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 22ஆம் நாள் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு அவர் எழுதிய கடிதத்தில், உடல்நலக் காரணங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

பதவி விலகியபின் ஜெகதீப் தன்கர் குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் ஜெகதீப் தன்கர் எங்குள்ளார் என்று எந்தத் தகவலும் தெரியவில்லை என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது வீட்டிலும் இல்லை. அவர் நண்பர்களாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? என்றும் வினவியுள்ளார்.

ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *